Tuesday, 5 January 2016

ஒரு மரத்தின் சுயசரிதை


நண்பர்களே, நான் தான் நீங்கள் தினமும் வழிப்படும் வேப்பமரம். நான் இங்கு என் சுயசரிதையை மிகச் சுருக்கமாக, என் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை மட்டும் குறிப்பிட்டு உங்கள் முன் நிழலிடுகிறேன்.

நின்றால் நிழல், படுத்தால் விறகு, எரித்தால் சாம்பல் உரமாக நான் இந்நாள் வரை இருந்தேன். மனிதர்கள், பறவைகள், விலங்குகள் என பலவற்றிற்கு என்னால் இயன்ற உதவிகளை செய்துகொண்டு வருகிறேன். ஆயினும், என்னைப் போல் பலரின் தலையெழுத்தை சிலர் மாற்றிவிட்டனர்.
நான் 1876 ஆம் ஆண்டு, தை மாதம் 8 ஆம் நாள், பூவரசநல்லூர் என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தேன். கமலா என்ற ஒரு சிறுமி என்னை கண்ணும் கருத்துமாய் வளர்த்தாள்.

தினமும் எனக்கு தேவையான தண்ணீரை ஊற்றி, என்னையும் அவளைப்போல் ஒரு சிறுமியாக கருதி, என்னுடன் விளையாடினாள். நானும் அவளுக்கு எப்பொழுது ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும், என் காய்கள், கனிகள், கொட்டைகள், பூக்கள் முதலியவற்றை மருந்தாக அளித்தேன். இதனால் நாங்கள் இருவரும் மிக நெருக்கமான சிநேகிதர்கள் போல் பழகிவந்தோம்.

அவளுக்கு மட்டுமல்லாமல் கிராமத்தில் உள்ள மற்றவர்களுக்கும் நான் உதவியாக இருந்தேன். ஆனால், ஒரு நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

ஒரு நாள் கமலாவும் அவளது தோழிகளும் உல்லாசமாக என்னை சுற்றி விளையாடிக் கொண்டிருந்தனர். பச்சை பசேலென்று அங்கு இருந்த புள்ளிலிருந்து சலசலவென ஒரு சத்தம் கேட்டது. மிக வேகமாக சில பேர் நடந்து வருவதை உணர்ந்தேன். சற்று திரும்பி பார்த்தவுடன் எனக்கு பகீரென்றது. கோடாரியுடன் இருவர் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
“ஒன்றைக் கூட விடாதீர்கள், அனைத்தையும் வெட்ட வேண்டும்” என்று ஒரு குரல் ஒலித்தது. விரைவாக வந்த இருவர், கோடாரியால் என் தாயை நோக்கி சென்றார்கள். என் கண் முன்னால் என் தாய் இறப்பதை காண தைரியம் இல்லாத நான் அவர்களிடம் கெஞ்சினேன், கதறினேன்.
“மனிதர்களே மருந்தாக நிழலாக உரமாக இருந்த எங்களை வெட்டுவதற்கு உங்களுக்கு ஈவு இரக்கம் இலலையா. பலரை வாழ வைத்த எங்கள் வாழ்க்ககை்கு உலை வகைகிறீர்களே, இது நியாயமா?” என்றனே். பலமாக சிரித்த ஒருவன், “இதை எங்களிடம் கேட்காதே அதோ பார் பளிங்கு மாளிகை தெரிகிறதே. அதற்கு சொந்தக்காரரான பண்ணயைார் இந்த நிலத்தில் பெரிய தொழிற்சாலை கட்டப்போகிறார்” என்றான்.

“அது சரி அதற்கு முன் நான் சொல்வதைக் கேளுங்கள். எங்களை வளர்ப்பதால் மழை கிடைக்கிறது, மண் அரிப்பு தடுக்கப்படுகிறது, காடுகள் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் அழிப்பதாலோ வெப்பமயமாகுதல், காற்று மாசுபடுதல் மற்றும் அமில மழை உண்டாகின்றன” என்று கூறினேன். கவனமாக கேட்ட அவர்கள், “மரமே நீ சொல்வதில் உண்மை இருக்கிறது. நாங்கள் இப்போதே பண்ணையாரிடம் மரத்தை வெட்டுவதை நிறுத்த சொல்கிறோம் என்றனர். அவர்கள் அகக்கண்கள் திறக்கப்பட்டதைக் கண்டு அகமகிழ்ந்தேன்.
எனக்கு நடந்த இச்சம்பவத்திலிருந்து நான் தப்பினேன். ஆனால், எனக்குப் பின் வந்த பல மரங்களுக்கு எங்களைப் போல் அவர்களிடத்தில் பேசி புரியவைப்பதற்கு வாய்ப்பு கிட்டவில்லை. இன்றோ நான் வாழ்ந்த இடம் ஒரு வெறுத்த பாலைவனமாக இருக்கிறது.

அதனால் தான் கூறுகிறேன் நண்பர்களே, எங்களை வாழவிடுங்கள், நாங்கள் உங்கள் வாழ்க்கையை செம்மையாக்குகிறோம்.

லிபி







No comments:

Post a Comment